இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0004வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:4)

பொழிப்பு: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

மணக்குடவர் உரை: இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.
பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

பரிமேலழகர் உரை: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
(பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

இரா சாரங்கபாணி உரை: விருப்பு வெறுப்பின்றி நடுநிலையிலிருப்பவனின் திருவடியை இடையின்றி நினைப்பவர்க்கு எப்பொழுதும் துன்பங்கள் இல்லை. .


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேண்டுதல்-வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு:
பதவுரை: வேண்டுதல்-விரும்புதல்; வேண்டாமை-வெறுத்தல் இலான்-இல்லாதவன்; அடி-தாள்; சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்.
மணக்குடவர் கருத்துரை: பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" எனப்பெயரிட்டார்.
பரிதி: விருப்பு வெறுப்பு இல்லாதான் பாதம் சேர்ந்தார்க்கு;.
காலிங்கர்: உலகத்து யாதானும் ஒருபொருளை விரும்புதலும் விரும்பாமையும் இல்லாத இறைவன் அடியை அன்பொடு சேர்ந்தார்க்கு;
பரிமேலழகர்: ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு..

பழம் ஆசிரியர்களுள், மணக்குடவர் வேண்டுதல், வேண்டாமை என்றதற்கு இன்பமும் வெகுளியும் என்று பொருள் கொள்கிறார். பரிதி: விருப்பு வெறுப்பு என்கிறார். காலிங்கர் அவற்றிற்கு விரும்புதல்- விரும்பாமை என்று உரை கண்டார். பரிமேலழகர் இவரைத் தழுவி விழைதலும் வெறுத்தலும் என்றார். இவை இல்லாதவனது திருவடியைச் சேர்ந்தார்க்கு என்று தொல்லாசிரியர்கள் இப்பகுதியை விளக்குவர்.

இன்றைய ஆசிரியர்கள் ' விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு', 'இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெறுப்பின்றி அவனை வணங்கவேண்டும்.', 'யாதொரு பொருளையும் விரும்புதலும் வெறுத்தலும்ில்லாத கடவுளுடைய மாட்சிமைப்பட்ட திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களூக்கு', 'எதையும் விரும்புதலும் வெறுத்தலும் இில்லாதவனாகிய கடவுளின் அடிகளைச் சேர்ந்தவர்க்கு 'என்றபடி பொருள் உரைத்தனர்

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது திருவடியை மறவாமல் நினைப்பவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

யாண்டும் இடும்பை இல:
பதவுரை: யாண்டும்-எக்காலத்தும்; இடும்பை-துன்பம்; இல-உளவாகா.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.
பரிதியார்: துன்பம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்தானும் துயரம்இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
பரிமேலழகர் விரிவுரை: பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.

பழைய ஆசிரியர்களில், 'யாண்டும்' என்பதற்கு மணக்குடவரும் காலிங்கரும் எவ்விடத்தும் என இடப்பொருளில் உரை கண்டனர். இச்சொல்லுக்கு பரிமேலழகர் எப்பொழுதும் என்று காலப்பொருள் கொள்வார். இடும்பை என்பதற்கு அனைவரும் துன்பம் என்றே குறித்தனர். பரிமேலழகர் பிறவித் துன்பங்கள் என்றார். எவ்விடத்தும்/எக்காலத்தும் துன்பங்கள் இல்லை என்பது பழம் ஆசிரியர்கள் கூறும் பொருளாகும்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் துன்பங்கள் இல்லை' 'அப்படிச் செய்தால் எப்போதும் துன்பப்படாதிருக்கலாம்.' 'எக்காலத்தும் துன்பங்கள் உண்டாகமாட்டா', 'எக்காலத்திலும் துன்பங்கள் இில்லை 'என்றபடி பொருள் உரைத்தனர்

எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்கள் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் எனச் சொல்லும் குறள்.

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது திருவடியை மறவாமல் நினைப்பவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்கள் இல்லை என்பது பாடலின் பொருள்.
இறைவனை நினைத்தல் துன்பம் நீங்குதல் இயைபு என்ன?

வேண்டுதல் என்ற சொல்லுக்கு விரும்புதல் என்பது பொருள்.
வேண்டாமை என்ற சொல் வெறுத்தல் என்ற பொருள் தரும்.
இலான் எப்ற சொல் இல்லாதவன் என்ற பொருள்படும்.
அடி சேர்ந்தார்க்கு என்ற தொடர்க்கு திருவடியை அடைந்தவர்க்கு எனப் பொருள் கொள்வர்.
யாண்டும் என்ற சொல்லுக்கு எவ்விடத்தும் என்றும் எக்காலத்தும் என்றும் இருதிறமாகப் பொருள் கூறுவர்.
இடும்பை என்ற சொல் துன்பம் குறித்தது.
இல் என்ற சொல் இல்லை எனப்படுவது.

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளை மறவாமல் நினைப்பவர்க்குத் துன்பங்கள் இல்லை.

வேண்டுதல் வேண்டாமை' என்பதை உரை ஆசிரியர்கள் பொதுவாக'ப் பொருள்மேல் வைத்து விளக்குகின்றனர்.
உருவப் பொருள்களின் மீதான பற்றை விரும்புதல் என்றும் அதன் மீதான பற்றின்மையை விரும்பாமை என்றும் கூறி இக்குணங்கள் அற்ற கடவுளே வேண்டுதல் வேண்டாமை இலான் ஆவான் எனக் கூறுவர் ஒரு சாரார். இது இறைவனின் பற்றற்ற நிலையைக் குறித்தது என்பர் இவர்கள்.
இன்னொரு சாரார் இறைவன் காய்தல் உவத்தல் அற்றவன் என்பதாக இக்குறளில் கூறப்படுகிறது என்கின்றனர். அதாவது 'இவன் வேண்டியவன், அவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு இல்லாதவன் இறைவன்; தன்னை நம்புகிறவனும், நம்பாதவனும், அல்லது தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்; அவன் படைப்பில் அனைவரும் சமம்; அதனால் தம்மை வணங்குபவர்க்கு எதையும் தருவதோ, தவறு செய்தோரைத் தண்டிப்பதோ என்றபடி இல்லை; எவரொவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எந்த ஒரு செயலையும் செய்யத் தேவையில்லாதவன்; நடுநிலையிலிருப்பவன்; நீதியின் பெருந்தலைன் கடவுள்' என்பர் இவர்கள்.
நாமக்கல் இராமலிங்கம் 'பகவான் விருப்பு வெறுப்பு இல்லாத குணத்தின் பூரணம் நாமும் விருப்பு வெறுபபில்லாமல் அவனை வணங்கினால்தான் அவனுடைய அருளை அனுபவிக்க முடியும். அதாவது அந்த பகவான் நமக்கு ஒரு நன்மை செய்ய வேண்டுமென்று கோரியோ அல்லது நாம் விரும்பாததை இன்னொருவனுக்கு ஒரு தீமை செய்ய வேண்டும் ஏன்று கோரியோ வணங்கக்கூடாது'' என இக்குறட்கருத்தை விளக்குவார்.

'அடிசேர்ந்தார்க்கு' என்ற தொடர்க்கு 'இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு' என்றும் 'இடைவிடாது நினைப்பவர்க்கு' என்றும் பொருள் கூறுவர். இச்சொற்றொடர் பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு சிறப்பாக உள்ளது. அவர் சொல்வது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'.

இறைவனை நினைத்தல் துன்பம் நீங்குதல் இயைபு என்ன?

இறைவன் இவ்வுலக நிகழ்ச்சிகளைக் குறித்து காய்வோ உவப்போ இல்லாதவனாய், இவற்றால் பாதிக்கப்படாதவனாய், பற்றற்றதாய நிலையில், உள்ளான் என்பதே வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதற்கு வள்ளுவர் கொண்ட கருத்தாகலாம்.
தன் அடிசேர்ந்தவனை இறைவன் விரும்புகிறான்; அதனால் அவன் துன்பங்கள் நீங்கத் துணை செய்வான் என்று 'சொன்னால் அது கடவுள் வேண்டுவோர்க்குப் பயன் அளிப்பவர் என்று' ஆகிவிடும். அப்படிக் கொண்டால் அப்பொருள் அவன் 'வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்' என்ற பண்புக்கு எதிராக அமையும். இக்குறள் கூறும் கருத்து அதுவல்ல.

விருப்பு வெறுப்பு கொண்ட மனநிலைதான் துன்பங்களுக்குக் காரணம். வேண்டுமென்கிற ஆசையும் அதனால் கிடைக்கும் இன்பம் என்கிற எண்ணமும், கிடைக்காததனால் விளையும் ஏமாற்றமும், சினமும்,, வேண்டாமென்கிற வெறுப்பும், துன்பம் அளிப்பவை.
விருப்பு வெறுப்பைக் கடந்தவனாகிய இறைவன் அடி சேர்ந்தார்க்கு, அவனது குணநலனாகிய வேண்டுதல், வேண்டாமை இல்லாத தன்மையும் சேர்ந்துவிடுவதால், விருப்பு வெறுப்பில்லா நிலைக்குச் செல்வர். கடவுள் பற்றற்றவனாதலால் அவனை இடைவிடாமல் நினைந்தோரும் பற்றற்றவராக மாறிவிடுவர். இந்த நிலையில் அவரது மனம் சமநிலைப்படும். விருப்பு வெறுப்பு இரண்டும் இருக்காதவருக்கு மன அமைதி இருக்குமாதலால் துன்பம் அவரைத் தாக்காது. துயரம் நீக்க வள்ளுவர் காட்டும் வழி விருப்பு வெறுப்பற்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வது. வேண்டுதல் வேண்டாமையை விலக்கிவிட்டால் துன்பமில்லா நிலை அருகும்.
இறைவனை நினப்பவர் இவ்விதம் துன்பம் உறா நிலை எய்துவர்.

விருப்பும் வெறுப்புமற்ற இறைவனது அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் துன்பம் இல்லை என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

விருப்பும் வெறுப்பும் நீஙிகிவிட்டால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை எனச் சொல்லும் கடவுள் வாழ்த்துப் பாடல்

பொழிப்பு

விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் துன்பம் இல்லை.